திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் வாலிக்கு இன்று 92 வது பிறந்தநாள். எளிய சொற்களில் உயர்ந்த கருத்துகளை பாடல்வரிகள் மூலம் விதைத்த காவியக் கவிஞரைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காண்போம்...
தமிழ்த் திரையுலகில் எம்ஜிஆர் கொடிகட்டிப் பறந்தபோது அவரது படங்களுக்கு கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகள்தான் இவை. வாலியின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்ததால், எம்ஜிஆர் அவரையே தனது படங்களுக்கு பாட்டெழுத வைத்தார். படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட 63 படங்களுக்கு வாலி பாடல்களை எழுதியிருக்கிறார்.
சிவாஜி கணேசன் நடித்த 70 படங்களுக்கு பாடல்களை எழுதியவர் வாலி. அன்புக்கரங்கள், உயர்ந்த மனிதன், பாரதவிலாஸ் போன்ற திரைப்படங்களில் அவர் எழுதிய பாடல் வரிகள் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றன.
திரைப்படப் பாடல்களில் உயர்ந்த தத்துவக் கருத்துகளை எளிய வரிகளில் எழுதியவர் கவிஞர் வாலி. தத்துவம் மட்டுமின்றி காதலிலும் வாலியின் வரிகள் இளைஞர்களுக்கு புதையல்களாக உள்ளன.
ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் படங்களில் ஏராளமான பாடல்களை எழுதியதுடன், சிவகார்த்திகேயன் வரை ஹிட் பாடல்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வைத்ததில் வாலிக்கு முக்கியப் பங்கு உண்டு
கேவி மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, வேதா, சங்கர் கணேஷ்,இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்களுக்கு வாலியின் பாடல் வரிகளுக்கு எளிதாக இசையமைத்தனர்.
சின்னஞ்சிறு சொற்கள், அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் எளிய வரிகள்...ஆனால் உயர்ந்த கருத்துகள்...இப்படி 15 ஆயிரம் பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி.
அவதார புருஷன், பாண்டவர் பூமி போன்ற புத்தகங்களை எழுதியுள்ள வாலி, சில படங்களில் நடித்திருப்பதுடன், திரைப்பட வசனங்களும் எழுதியுள்ளார். 2007ம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
காலம் மாறும் போதும் சிலரின் சாதனைகள் மறைவதே இல்லை. தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை வாலியின் பாடல்வரிகளும் அப்படித்தான்.