கணவனை இழந்து 5 குழந்தைகளுடன் நிற்கதியாய் தவித்த குடும்பத்திற்கு கடலூர் மாவட்ட போலீஸார் வாட்ஸ் அப் குழு மூலம் நிதி திரட்டி 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கான்கிரீட் வீடு கட்டிக் கொடுத்துள்ளனர். காவலர்களின் கருணை உள்ளத்துக்கு சாட்சியான கான்கிரீட் இல்லம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
மேளதாளங்கள் முழங்க காக்கி உடுப்பும் மிடுக்கு நடையுமாக அதிகாரிகள் நடந்துச் செல்ல அவர்களுக்கு பின்னால் கையில் தட்டோடு சீர்வரிசை ஏந்தி வரும் பெண்கள் அனைவரும் கடலூர் மாவட்ட காவல் துறையின் பெண் காவலர்கள்..!
அனைவரும் ஏதோ காவல் உயர் அதிகாரியின் வீட்டு நிகழ்ச்சிக்காக செல்லவில்லை. மாறாக, குடும்பத்தலைவரை இழந்து நிற்கதியான ஒரு ஏழை குடும்பத்திற்கு , போலீசார் செலவில் கட்டிக் கொடுத்த வீட்டை ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்காகவே இந்த மங்களகரமான ஊர்வலம்.
விருத்தாசலம் மணலூர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான கட்டிட தொழிலாளி சக்திவேல் என்பவர் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி டூவீலரில் வேலைக்குச் சென்றவர் சாலையோரம் சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் 2 பெண், 3 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
கணவனின் இறப்பால் குடும்பமே நிலைகுலைந்த நிலையில், கணவனின் இறப்புக்கான காரணத்தை கண்டறியவும் உரிய நிவாரணம் பெற்றுத் தரக்கோரி விருத்தாசலம் சரக டி.எஸ்.பி ஆரோக்கியராஜை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் முத்துலட்சுமி.
விசாரணைக்காக முத்துலட்சுமியின் வீட்டிற்குச் சென்ற போது மேலே கூரையும், சுற்றிலும் கிழிந்த சேலைகளும், சாக்கு பைகளையும் சுவர்களாக பயன்படுத்தியும் வீடு இருப்பதையும் அந்த வீட்டில் தான் 5 குழந்தைகளோடு முத்துலட்சுமி வசித்து வருவதையும் கண்டார் டி.எஸ்.பி.
இந்த காட்சி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜின் மனதை நெகிழச் செய்யவே, உடனடியாக ஐந்து குழந்தைகளையும் ஜவுளி கடைக்கு அழைத்துச் சென்று நல்ல துணியும், உணவும் வாங்கிக் கொடுத்தார். படிப்பதற்கு தேவையான உதவிகளை செய்ததுடன், அந்த குடும்பத்திற்கு கான்கிரீட் வீடு கட்டி கொடுக்க முடிவு செய்தார் டி.எஸ்.பி.
முத்துலட்சுமியின் வறுமை நிலை குறித்து தனது சரக பகுதியில் காவலர்களுக்காக உருவாக்கப்பட்ட உதவும் காவல் இதயங்கள் என்ற வாட்ஸ் அப் குழுவில் தெரிவித்து உதவி கோரினார் டி.எஸ்.பி.ஆரோக்கியராஜ்.
உதவ வந்த பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்து சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வீடு ஒன்றையும் கட்டி முடித்தார் டி.எஸ்.பி.ஆரோக்கியராஜ்.
காவல்துறையினரின் பங்களிப்பில் கட்டப்பட்ட இந்த வீட்டின் திறப்பு விழாவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமை வரவழைத்து அவர் மூலமாகவே வீட்டைத் திறந்து முத்துலட்சுமியின் குடும்பத்தினரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. அந்த குழந்தைகளை பூ தூவி வாழ்த்தும் போது எஸ்.பி .ராஜாராம் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார்
பார்வையாலே நடுங்க வைக்கும் மிடுக்கான காவல்துறையில், மென்மையான இதயமும், மனிதாபிமானமும் உள்ள பல நல்ல உள்ளங்கள் உண்டு என்பதற்கு கடலூர் மாவட்ட காவல்துறையினர் கருணை உள்ளத்தோடு கட்டிக் கொடுத்த இந்த கான்கிரீட் இல்லமே சாட்சி..!