விஜயதசமி பண்டிகையையொட்டி முதன்முறையாக பள்ளி செல்ல உள்ள குழந்தைகளுக்கு கோயில்களில் வித்யாரம்பம் செய்து வைக்கப்பட்டது.
தங்கத்தில் தேன்தொட்டு நாக்கில் வைத்து, காதில் ஹரிஓம் மந்திரத்தை ஓதிய பிறகு, குழந்தைகள் அரிசியில் அகரத்தை எழுதினர். சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் குழந்தைகளுடன் வந்த பெற்றோர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைத்தனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ள சரஸ்வதி அம்மன் கோயிலுக்கு குழந்தைகளுடன் வந்த பெற்றோர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தியபிறகு, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்தனர்.
நாகர்கோவில் வனமாளீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி சந்நிதானத்தில் ஏராளமான குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கப்பட்டது.
சேலத்தில் ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகளின் தங்க மோதிரத்தில் தேன் தடவி குழந்தைகளின் நாக்கில் எழுதிய பிறகு, அரிசியில் எழுத்துக்கள் எழுதினர்.