கரூர் வைசியா வங்கியில் பணிபுரிந்த பெண் மேலாளரை காரில் வைத்து குத்தி கொலை செய்து விட்டு, சாலையில் இறங்கி லாரி முன்னால் பாய்ந்து வங்கி அதிகாரி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். இவர் விழுப்புரத்தில் உள்ள கரூர் வைசியா வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று சென்னை சென்று விட்டு திரும்பிய கோபி நாத், கிளியனூர் சந்திப்பு அருகே சாலையோரம் காரை நிறுத்தி விட்டு சென்டர் மீடியனை தாண்டி வந்து லாரி முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிணகூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது காரை ஆய்வு செய்த போலீசாருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது காரின் ஓட்டுனர் இருக்கை அருகில் உள்ள இருக்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தில் ஸ்குரூ டிரைவரால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக சாய்ந்து கிடந்தார். அவரை கொலை செய்து விட்டு கோபிநாத் லாரிக்குள் பாய்ந்திருக்கலாமோ ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர்.
விசாரணையில் கழுத்தில் குத்துக்காயங்களுடன் காருக்குள் சடலமாக இருந்த பெண் , நெய்வேலியை சேர்ந்த மதுரா என்பதும் அவர் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கரூர் வைசியாக வங்கியின் மேலாளர் என்பதும் தெரியவந்தது. கோபி நாத்தும், மதுராவும் கடந்த சில வருடங்களாக திருமணம் கடந்த உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.
இதனால் மதுராவின் குடும்பத்தில் பிரச்சனை உருவாகி உள்ளது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் மரக்காணத்தில் நடந்த புதிய வங்கிக்கான பூமி பூஜையில் பங்கேற்று விட்டு சென்னை சென்றுள்ளனர். அங்கு இருந்து ஜோடியாக காரில் திரும்பும் போது, தன்னை 2 வது திருமணம் செய்து கொள்ளும்படி மதுரா , கோபிநாத்திடன் வற்புறுத்தியதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியதால், காரை கிளியனூர் சந்திப்பில் சாலையோரம் காரை நிறுத்திய கோபிநாத், ஸ்குரூ டிரைவரால் மதுராவின் கழுத்தில் குத்தி கொலை செய்திருக்கலாம் என்று கூறும் போலீசார், பின்னர் தான் உணர்ச்சிவசப்பட்டு தவறிழைத்து விட்டோமே என்று லாரி முன் பாய்ந்து உயிரை மாய்த்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.
இருந்தாலும் இந்த சம்பவத்திற்கான பின்னணி குறித்து வங்கி ஊழியர்களிடம் போலீசார் விரிவான விசாரணை நடத்திவருகின்றனர்.