நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் நான்கு தலையாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டதை திரும்ப பெறாவிட்டால், தலையை அறுத்து விடுவோம் என்று பெண் தாசில்தாருக்கு தலையாரி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
4 தலையாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பை தாசில்தார் சுமதிக்கு எதிராக சீவலப்பேரி தலையாரி முருகன் மிரட்டல் விடுத்த காட்சிகள் தான் இவை..!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் சுமதி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் தலையாரிகளாக உள்ள உமாபதி, முத்துக்குமார், முத்துராமலிங்கம், சுப்பிரமணியன் ஆகிய நான்கு பேரை அருகே உள்ள வேறு பகுதிகளுக்கு இடம் மாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்தார். இதில் முத்துராமலிங்கம் செங்கல் சூளைகளுக்கு வண்டல் மண் கடத்தலுக்கு, உதவியதாக எழுந்த புகாரின் பேரில் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனைக் கண்டித்து கடந்த திங்கட்கிழமை மாலை அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் தலையாரிகள் சங்க மாநில செயலாளர் பிச்சி குட்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பேசிய தலையாரி சங்க மாவட்ட தலைவர் சீவலப்பேரி முருகன் என்பவர் வட்டாட்சியர் சுமதியை தர குறைவாக பேசியும் இட மாறுதலை ரத்து செய்யாவிட்டால் அவரது தலையை அறுத்து விடுவோம் என்று பேசியதால பரபரப்பு ஏற்பட்டது
தாசில்தாரையும் அவரது குடும்பத்தினரையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசி மிரட்டல் விடுத்ததால் அருகில் நின்றவர்கள் உஷாராகி மைக்கை வாங்க முயன்றதாகவும், சீவலப்பேரி முருகன் தொடர்ந்து கொச்சையாக பேசியதாகவும் கூறப்படுகின்றது
இந்நிலையில் வட்டாட்சியர் சுமதி , தனக்கு விடப்பட்ட கொலை மிரட்டல் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், தலையாரி சீவலப்பேரி முருகனை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகின்றது.