லியோ படத்தில் நடிகர் விஜய் உடன் சண்டையிடும் வனவிலங்கான கழுதைப்புலி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரையில் வெளிவர உள்ளது. இந்த படத்தில் கழுதைப்புலியுடன் விஜய் சண்டை போடும் காட்சி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கழுதைப்புலியின் குணங்கள் என்ன என்பது குறித்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் உலகில் 4 வகையான கழுதைப்புலிகள் இருப்பதாகவும், அதில் ஒரு வகை கழுதைப்புலி இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கழுதைப்புலிகள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த பண்பை கொண்டது என்றும் பெண்களுக்குத் தான் முக்கியத்துவம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த கழுதைப்புலி இரவு நேரத்தில் மட்டுமே வேட்டையாடும் என்றும் கூறியுள்ளார். கழுதைப்புலிகளை காடுகளை சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர் என்றே கூறலாம் என தெரிவித்துள்ளார்.
நல்ல நட்பு எண்ணம் கொண்ட இந்த கழுதைப்புலி, தன்னை சீண்டினால் யாராக இருந்தாலும் பழிவாங்கும் குணம் கொண்ட புத்திக் கூர்மை கொண்ட விலங்காகும் என்றும் கூறியுள்ளார்.
நட்புக்கு இலக்கணம், சீண்டுவோரை குறி பார்த்து பழிவாங்கும் புத்திக் கூர்மை, பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் உள்ளிட்ட கழுதைப்புலியின் குண நலன்கள் லியோ படத்தின் கதைக்களமாக இருக்கும் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.