நாகை மற்றும் இலங்கை காங்கேசன் துறைக்கு இடையே தொடங்கப்பட்டுள்ள பயணிகள் கப்பல் போக்குவரத்து இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் முக்கிய மைல்கல் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கப்பல் சேவையை காணொலி வாயிலாக தொடங்கி வைத்து பேசிய பிரதமர், இரு நாடுகளிடையேயான ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் இந்தியா-இலங்கை இடையே கடல்வழி போக்குவரத்து இருந்ததற்கான சான்றுகள் உள்ளதாகவும், சுப்ரமணிய பாரதியாரின் 'சிந்து நதியின் மிசை' பாடலில், இரு நாடுகளை இணைக்கும் பாலம் குறித்த வரிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்த வரலாற்று மற்றும் கலாசார தொடர்புகளை இந்த கப்பல் சேவை உயிர்ப்பித்திருக்கிறது தெரிவித்தார். மேலும், இந்தியா-இலங்கை இடையே வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்களின் உறவு மேம்படுவதுடன், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.