மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்களின் கவனக்குறைவு குறித்து அறிக்கை அளித்த மாநகராட்சி சுகாதார அதிகாரியை கண்டித்து அரசு மருத்துவர்கள் கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்திவரும் நிலையில் வியாழக் கிழமை முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குடும்ப நல அறுவை சிகிச்சைகளையும் புறக்கணிக்கப்போவதாக எச்சரித்துள்ளனர்..
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், அண்மையில், மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்ட இரு கர்ப்பிணி பெண்கள் அடுத்தடுத்து பலியானது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாநகராட்சி சுகாதார அலுவலர் வினோத் விசாரித்து அறிக்கை அளித்தார். அதில், ஒரு கர்ப்பிணி பெண் உயிரிழந்து இரு தினங்கள் ஆன நிலையில் அதனை மறைத்து அவர் உயிரோடு இருப்பதாக ஏமாற்றி இருதய நோய்க்கான சிகிச்சை அளித்ததாகவும், அந்த பெண்ணிற்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை மகப்பேறு மருத்துவர்கள் முழுமையாக திருத்தி இருப்பதாகவும் வினோத் கூறி இருந்தார்.
மாநகராட்சி சுகாதார அலுவலர் வினோத் அத்துமீறியதாக கூறி அரசு மருத்துவர் சங்க தலைவர் செந்தில் தலைமையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள அரசு மருத்துவர்கள், வினோத் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி 9 வது நாளாக போராட்டம் நடத்தினர்.
இதனால் கடந்த 9 நாட்களாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்யாமலும், நோயாளிகளை சரிவர கவனிக்காமலும் வீம்புக்கு போராட்டம் நடத்தி வருவதாக நோயாளிகள் வேதனை தெரிவித்தனர்.
மாவட்ட அரசு மருத்துவர்களும், மாநகராட்சி சுகாதார அலுவலர்களும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் பணிபுரிந்துவரும் நிலையில் அவர்களை சமாதானப்படுத்த, சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரின் முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அரசு மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே வியாழக்கிழமை முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குடும்ப நல அறுவை சிகிச்சைகளை புறக்கணிக்க போவதாக அரசு மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதனால், பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அறுவை சிகிச்சை நோயாளிகள் தெரிவித்தனர்.