மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கியதற்காக ஊர்பஞ்சாயத்தில் 4 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட காமுகர்களில் ஒருவன் தற்கொலை செய்துக் கொள்ள, வழக்கை சரியாக கையாளாத வாணியம்பாடி பெண் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயதான சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண். தாய்-தந்தை கூலி வேலைக்குச் செல்லும் நிலையில், வீட்டில் வளர்த்து வரும் ஆடுகளை வயல் பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார் அந்த பெண்.
இதனை நன்கு தெரிந்து வைத்திருந்த அதே ஊரைச் சேர்ந்த 52 வயதான மாணிக்கம், 60 வயதான கோவிந்தன் ஆகியோர் தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
வயிறு வலிக்காக அப்பெண்ணை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. எனவே, வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 5-ம் தேதி பெண்ணின் தரப்பினர் புகார் அளித்தனர்.
அதன்பேரில் மாணிக்கத்தையும், கோவிந்தனையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தார் காவல் ஆய்வாளர் சாந்தி.
விஷயம் ஊர் பிரமுகர்களுக்கு தெரிய வரவே, அவர்கள் இன்ஸ்பெக்டர் சாந்தியை சந்தித்து இப்பிரச்னையை ஊரில் பஞ்சாயத்தை கூட்டி பேசி தீர்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
நம்மை விட்டு கேஸ் போனால் போதும் என்ற நினைப்பில், ஆய்வாளர் சாந்தியும், ஊர் பிரமுகர்களிடமே பேசி பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளுமாறு பெண்ணின் தரப்பினை திருப்பி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
ஆலமரத்தடி பஞ்சாயத்தில், மாணிக்கமும், கோவிந்தனும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென பேசி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அபராதம் விதிக்கப்பட்டதால் மனவேதனை அடைந்த மாணிக்கம் நெக்குந்தி என்ற இடத்தில் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பிற்கே பிறகே இந்த பாலியல் பஞ்சாயத்து விவகாரம் வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமியின் கவனத்திற்கு சென்றது.
பாலியல் புகார் வழக்கில் மெத்தனமாக நடந்து கொண்டதாக காவல் ஆய்வாளர் சாந்தியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிய டி.ஜ.ஜி, இந்த வழக்கினை நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் மலர் விசாரிக்கவும் உத்தரவிட்டார்.
புகாரில் தெரிவிக்கப்பட்ட இருவரில் ஒருவர் இறந்து விட்டதால் தற்போது கோவிந்தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீஸார்.
காவல் நிலையங்களைத் தேடி வரும் வழக்குகளை கட்டப்பஞ்சாயத்திற்கு அனுப்புவோர் மீது உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.