அரசு மருத்துவமனையில் காலியாக இருக்கும் படுக்கையில் இரவில் தங்கியிருந்து குடித்து கும்மாளமிட்ட இரண்டு பெருசுகளை இளைஞர்கள் சிலர் ரவுண்டு கட்டி விரட்டியடித்தனர்.
பெட்டுக்கு அடியில் காலியான டெட்ரா மது பாக்கெட்டுகளும், பெட்டுக்கு மேலே சிந்திய மிக்சருமாக இருப்பது லாட்ஜ் அறையல்ல.... திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகள் தங்கியிருக்கும் அறையின் நிலை தான் இது.
தாலுகா மருத்துவமனையாக இருந்து அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட, இந்த மருத்துவமனைக்கு, தினமும் ஏராளமானோர் உள் மற்றும் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆண்களுக்கான உள்நோயாளிகள் வார்டில் அடுத்தடுத்த படுக்கையில் இருந்த இரண்டு பெருசுகள் இரவில் மது குடித்து கும்மாளம் அடித்து வந்ததாக கூறப்படுகின்றது. இதனை, மற்ற நோயாளிகளுக்கு உதவிக்காக வந்திருந்த இளைஞர்கள் சிலர் கண்டித்து கேள்வி எழுப்பினர். ஆனால் அவர்களோ கால் வலிப்பதாகவும் அதனால் மது குடிப்பதாகவும் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் மது அருந்தலாமா ? என கேட்டுக் கொண்டே வீடியோ எடுத்தனர் அந்த இளைஞர்கள். நான் நோயாளியே கிடையாது, இவன் தான் துணைக்கு கூப்பிட்டான் அதனால் குடிக்க வந்ததாக ஒருவர் கூறினார். மேலும், அவன் டிஸ்சார்ஜ் ஆகி 2 நாட்களாகி விட்டதாகவும் தெரிவிக்க, மற்றவரோ இவன் யாரென்றே தனக்கு தெரியாது எனக் கூறி ஒருவரை மாற்றி ஒருவர் குற்றஞ்சாட்டினர்.
கட்டிலின் மேல் உள்ள படுக்கையை தூக்கிப் பார்த்தால் உள்ளே கர்நாடக மாநில தயாரிப்பு டெட்ரா காலி மது பாக்கெட்டுகளும், ஆம்லேட் வாங்கி தின்று விட்டு அதனை மடித்து வைத்த எச்சில் இலைகளும் இருந்தது தெரிய வந்தது.
அங்கு திரண்ட இளைஞர்கள் இது ஆஸ்பத்திரியா இல்ல ? ஒயின் ஷாப் பாரா ? என்று கேள்வி எழுப்பிய நிலையில் ஒருவர் கால்மேல் கால் போட்டு படுத்துக் கொண்டார்
ஒருகட்டத்தில், மப்டியில் வந்த போலீஸ்காரர் ஒருவர் குடிகார குப்பன்களில் ஒருவரை மருத்துவமனையை விட்டு விரட்டினர். வெளியே வந்த அவர் தனது காலில் காயம் இருப்பதாகவும் அதற்காக கட்டுப் போட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், கட்டை அவரே அவிழ்த்த போது எந்த காயமும் இல்லை.
அந்த நபர் இரவு நேரத்தில் மருத்துவமனைக்குள் மதுபோதையில் ஆடையில்லாமல் சுற்றி வந்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார் அங்கிருந்த பெண் ஒருவர்.
இது குறித்து விளக்கமளித்த தலைமை மருத்துவர் சிவகுமாரோ, இவர்கள் 2 பேரும் ஏற்கனவே இதுபோன்றே மருத்துவமனையில் தங்கியிருந்ததை கண்டுபிடித்து போலீசாரை கொண்டு அப்புறப்படுத்தியதாக தெரிவித்தார். மருத்துவமனையின் முன்பகுதியில் மட்டுமே காவலர்கள் உள்ளதால் சந்து பொந்துகளில் புகுந்து இரவு நேரத்தில் உள்ளே நுழைந்து விடுவதாகவும், போதிய ஊழியர்கள் இல்லாததால் இந்த தவறு நடப்பதாகவும் ஒப்புக் கொண்டார் மருத்துவர் சிவகுமார்.