தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இருந்து 60 பயணிகளுடன் உதகைக்கு சுற்றுலா சென்று திரும்பிய பேருந்து பிரேக் பழுதானதால், குன்னூர் மலையில் இருந்து 50 அடி பள்ளத்தில் உருண்டதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சமவெளி பகுதி பேருந்து ஓட்டுனர், மலைப்பகுதியில் செய்த தவறால் நிகழ்ந்த கோர விபத்து குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
உதகையில் இருந்து குன்னூர் வழியாக கோவை நோக்கி கீழே இறங்கிக் கொண்டிருந்த தென்காசியை சேர்ந்த சுற்றுலா பேருந்து ஒன்று குன்னூர் அடுத்த மரப்பாலம் பகுதியில் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பேருந்துக்குள் சிக்கியவர்களை கயிறுகட்டி மீட்டனர். விபத்துக்குள்ளான பேருந்தில் 60 பேர் பயணித்ததாகவும் இந்த கோரவிபத்தில் 8 பேர் பலியானதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காயத்துடன் மீட்கப்பட்ட 39 பேர் குன்னூர் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் உதகை அரசு மருத்துவமனையிலும் ஒருவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் கா.ராமச்சந்திரன் சந்தித்து நலம் விசாரித்தார், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து. அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க கேட்டுக் கொண்டார்.
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
விபத்தில் சிக்கியவர்கள் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் இருந்து விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக உதகைக்கு சுற்றுலா வந்து திரும்பியபோது பேருந்தின் பிரேக் செயல் இழந்து இந்த விபரீத விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.
சமவெளி பகுதியில் பேருந்து உள்ளிட்ட வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள் மலைப்பகுதியில் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டியது அவசியம், ஆனால் பெரும்பாலான ஓட்டுனர்கள் மலையில் இருந்து இறங்கும் போது சமவெளி பகுதியில் செல்வது போல கட்டுப்பாடற்ற வேகத்தில் வாகனங்களை இயக்குவதாகவும், அப்படி இயக்கும் போது பிரேக் சூடாகி எளிதில் செயல் இழந்து விடும் அபாயம் உள்ளதாகவும், சில நேரங்களில் ஸ்டியரிங் கட்டாகும் அபாயம் உள்ளதாகவும் அப்படி ஒரு விபரீதம் தான் இந்த பேருந்திலும் நிகழ்ந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகின்றது.
இருந்தாலும் பேருந்தை மீட்டு முழுமையாக ஆய்வு மேற்கொண்ட பின்னரே விபத்துக்கான முழுவிவரங்களும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.