புதுக்கோட்டையில் வயிற்றுவலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளியின் வயிற்றுக்குள் இருந்து 7அப் குளிர்பானத்தின் கண்ணாடி பாட்டில் ஒன்றை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர். 47 வயதுக்காரர் வயிற்றுக்குள் பாட்டில் சென்றது எப்படி என்று அறுவை சிகிச்சை நிபுணர் அளித்த விளக்கத்துடன் விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த 45 வயது உடைய நோயாளி ஒருவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கடுமையான வயிற்று வலி எனக்கூறி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வயிற்றில் 21 சென்டிமீட்டர் உயரமும் 17 சென்டிமீட்டர் அகலம் உள்ள கண்ணாடி பாட்டில் உள்ளே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி பொறுப்பு முதல்வர் மருத்துவர் ராஜ்மோகன் தலைமையில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.
மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவருக்கு மறு நாளே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது அவரது வயிற்றுக்குள் செவன் அப் குளிர்பான கண்ணாடி பாட்டில் ஒன்று உள்ளே இருந்தது, அதனை வெளியே அகற்றியதாகவும், இது கண்டிப்பாக வாய் வழியாக உள்ளே சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும் அவரது மலக்குடல் கிழிந்துள்ளதால் ஆசனவாய் வழியாகத்தான் உள்ளே சென்றிருக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தற்போது சிகிச்சையில் இருக்கும் அவரது மலக்குடல் வழியாக செவன் அப் பாட்டிலை உள்ளே திணித்தவர்கள் யார் என்பதை கண்டறிய போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.