கரூர் அருகே திமுக பெண் கவுன்சிலர் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்த சம்பவத்தில், அவரை தலை நசுக்கி கொலை செய்ததாக கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். நகைக்காக தோழி செய்த கொடூர செயல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
ஈரோடு மாவட்டம் சென்னசமுத்திரம் அடுத்த சோகாளிபாளையம் அதிதிராவிடர் காலணியை சேர்ந்தவர் 42 வயதான ரூபா. சென்ன சமுத்திரம் பேரூராட்சியில் 7 வது வார்டு திமுக கவுன்சிலரான இவர் வீட்டு வேலைகள் செய்து வந்தார். திங்கட்கிழமை வீட்டு வேலைக்கு செல்வதாக கூறி விட்டுச்சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கரூர், பாலமலை அருகில் குமாரசாமி என்பவருக்கு சொந்தமான காட்டில் கவுன்சிலர் ரூபா தலை நசுக்கி கொலை செயப்பட்டு அரை நிர்வாணாகோலத்தில் சடலமாக கிடந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் சம்பவத்தன்று அவருடன் வீட்டு வேலை பார்க்கும் நித்யா என்ற பெண்ணிடம் கடைசியாக செல்போனில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் ஒரே வீட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் தோழிகளாயுள்ளனர். சம்பவத்தன்று நித்யாவும் வேலைக்கு செல்லவில்லை என்பதை கண்டறிந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது நகைக்காக தோழியை திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய சம்பவம் அம்பலமானது.
வீட்டு வேலைக்கு சென்றாலும் கவுன்சிலர் ரூபா, தனது கழுத்தில் தங்கச்சங்கிலி, காதில் மாட்டலுடன் கூடிய கம்மல் , காலில் கொலுசு போன்ற வற்றை அணிந்திருந்ததாக கூறப்படுகின்றது. இது தோழி நித்யாவின் கண்களை உறுத்தி உள்ளது. தனது கணவருடன் சேர்ந்து ரூபாவின் நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்ட நித்யா , சம்பவத்தன்று தங்கள் ஊர் பக்கம் ஒரு வீட்டில் வேலை இருப்பதாக கூறி அழைத்துள்ளார்.
அதனை நம்பி பேருந்தில் புறப்பட்ட ரூபா புன்னம் சத்திரம் கிராமத்தில் இறங்கி உள்ளார். அவரை தனது கணவர் கதிர்வேலுவின் இருசக்கரவாகனத்தில் ஏற்றி காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்ற நித்யா , எதிர்பாராத நேரத்தில் ரூபாவின் முகத்தில் கரப்பான் பூச்சிகளை கொல்ல பயன்படும் ஹிட் பூச்சி மருந்தை அடித்துள்ளார். அவர் நிலை தடுமாறி விழுந்ததும், அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி, கம்மல், மாட்டல் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்ப முயன்றுள்ளனர். இருந்தாலும் கதிர்வேலை ஓடவிடாமல் ரூபா மடக்கிப்பிடித்ததாக கூறப்படுகின்றது
இதையடுத்து நித்யா, ரூபாவின் மேலாடையை பிடித்து இழுத்த போது அது கிழிந்து கையோடு வந்துள்ளது. இதையடுத்து ரூபாவை தாக்கி கீழே சாய்ந்து, தலையில் கல்லை போட்டு நசுக்கி கொலை செய்துவிட்டு காலில் கிடந்த கொலுசையும் களவாடிச்சென்றுள்ளனர். கரூர் அடகு கடையில் திருட்டு நகைகளை விற்க முயன்ற போது கதிர்வேல் - நித்யா தம்பதியரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
உற்ற தோழியாக இருந்தாலும் கழுத்தில் நகைகளுடன் நம்பிச்செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி ..!