நாகப்பட்டினம் மாவட்டம் திருவாய்மூரில் தண்ணீர் இல்லாமல் 50 ஏக்கரில் பயிரிழப்பட்ட குறுவை பயிர் காய்ந்து போனதால் டிராக்டரால் அழித்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் அவதரித்த தமிழகத்தில் காவிரி தண்ணீர் இன்றி வாடிய குறுவை பயிரை கண்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு விவசாயி ஒருவர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது
தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை நம்பி நாகப்பட்டினம் மாவட்டத்தில் 62 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மூலமாக குறுவை பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். கடைமடை பகுதிக்கு போதுமான அளவு காவிரி நீர் வந்து சேரவில்லை, ஆற்றில் வந்த தண்ணீர் கூட பாசன வாய்க்காலை வந்து சேராததால் பயிர்களுக்கு நீர் கிடைக்காததை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்தனர்
ஒரு சில விவசாயிகள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து பல கிலோமீட்டர் தூரம் மோட்டார் கொண்டு வந்து தண்ணீர் இறைத்து பயிரை காப்பாற்ற முயன்றனர். கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்ததாலும் பருவமழை பொய்த்ததாலும், போராடி வளர்த்த பயிர்கள் கருக தொடங்கியது
விவசாய நிலம், வானம் பார்த்த பூமி போல வெடிக்க தொடங்கியது . இதனால் பலர் தங்கள் நிலத்தில் பயிரிட்டிருந்த 80 நாட்கள் குறுவை பயிரை டிராக்டர் கொண்டு அழித்தனர். இவர்களை போல மனைவியின் நகைகளை அடகு வைத்து திருவாய் மூரை சேர்ந்த ராஜ்குமார் என்ற விவசாயியும் குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்டிருந்தார். அவரும் தனது நிலத்தை டிராக்டர் கொண்டு அழிக்கும் பணியில் ஈடுபட்டார். 50 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்த நிலையில் கைக்குகூட எட்டாமல் போய்விட்டதே என்று கலங்கிய அவர் அதிர்ச்சியில் அங்கேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகின்றது.
அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் உறவினர்களும் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 2 லட்சத்து 5 ஆயிரத்துக்கும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 3 லட்சம் ரூபாயும், தனியாரிடம் 62 ஆயிரம் ரூபாயும் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து செலவிட்டுள்ளார். அப்படி இருந்தும் தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடி கைவிட்டதால் வீட்டில் புலம்பியபடியே இருந்துள்ளார். இந்த நிலையில் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மனைவி ரூபாவதி கண்ணீர் மல்க தெரிவித்தார்.
கணவரை இழந்து தவிக்கும் தனக்கும் தனது குடும்பத்திற்கும் அரசு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறுவை பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நம்பிக்கை அளிக்கும் விதமாக தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.