ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் அருகே கொத்தியார்கோட்டை கிராமத்தில் கன்மாய்கரையில் பாலம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த மறியலில், 80 வயது மூதாட்டி ஒருவர் ஜே.சி.பி யை மறித்து போராட்டம் நடத்தியதால் அவரை பெண்போலீசார் ஆடைகளை பிடித்து இழுத்து தூக்கிச்சென்றனர்
ஆள் தான் பார்க்க ஒடிசலான தேகம் ... தூக்கிப்பார்த்தா வைரம் பாஞ்ச கட்டை... பாலம் அமைக்கும் பணிக்கு வந்த ஜேசிபி யை தடுத்து பெண் போலீசுக்கே டஃப் பைட் கொடுத்த 80 வயது மூதாட்டி இவர் தான்..!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே கொத்தியார் பேட்டையில் 17 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திருப்பாலைக்குடியில் இருந்து, பால்குளம், கொத்தியார்கோட்டை வழியாக சோழந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் பால்குளம் கன்மாய் கரையில் இந்த பாலம் அமைக்கப்படுகின்றது. இந்த பாலம் அமைக்கப்பட்டால் பால்குளம் கண்மாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியே சென்று விடும் என்றும் இதனால் 300 ஏக்கரில் நெல், மிளகாய், பருத்தி பயிரிடும் விவசாயிகள் கடுமையாக பதிக்கப்படுவர் எனக்கூறி விவசாயிகள் பாலம் கட்டும்பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் குதித்தனர்
நீதிமன்ற உத்தரவு இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அபோது ஒரு மூதாட்டி பாலத்துக்காக பள்ளம் தோண்டிய ஜேசிபியை தடுக்க பள்ளத்துக்குள் குதித்தார். அவரை தூக்க பெண் போலீஸ் ஒருவர் முயல அவரால் முடியவில்லை
ஒற்றைகையில் மூதாட்டியை தூக்கி விடலாம் என்று தப்புக்கணக்கு போட்ட பெண் போலீஸ், உதவிக்கு உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் குழிக்குள் இறங்க தூக்க இயலாமல் கால்கள் நடுங்கியது
மூதாட்டியின் சேலை மற்றும் மேலாடையை பிடித்து இழுத்ததால் பாட்டி தனது பலத்தை சற்று குறைத்துக் கொண்டதால் அவரை அப்படியே தூக்கிச்சென்றனர்
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்டவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வேனில் ஏற்றிய நிலையில் தங்களை போலீசார் தாக்குவதாக பெண்கள் கூச்சலிட்டனர்
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி மக்கள் பாதிக்காத வகையில் பாலப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு