நாமக்கலில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், உணவக உரிமையாளர், பணியாளர் மட்டுமின்றி உணவகத்திற்கு கோழி இறைச்சி விற்பனை செய்த கறிக்கடை உரிமையாளரும் ஜாமீனில் வெளியே வர முடியாதபடி கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
நாமக்கலில் நடைபெற்ற கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் துரைராஜ், தமிழகத்தில் பெரும்பாலான மக்கள், உறையவைக்கப்படாமல் அப்போதே சுத்தம் செய்யப்பட்ட கோழிக்கறியை இறைச்சி கடைகளில் இருந்து வாங்கி செல்வதாக தெரிவித்தார்.
ஆனால், உணவக உரிமையாளர்கள் சிலர் கோழிக்கறியில் மசாலா சேர்த்து நாள் கணக்கில் குளிர் சாதன பெட்டியில் உறைய வைப்பதால், சில நேரம் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அதில் தயாரிக்கப்படும் ஷவர்மா, கிரில் சிக்கன் போன்றவற்றை சாப்பிடுவோருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கு இறைச்சி கடை உரிமையாளரை கைது செய்தது நியாயமற்ற செயல் எனவும், இதனால் தமிழகத்தில் உள்ள ஒன்றரை லட்சம் கறிக்கோழி விற்பனையாளர்களும் அச்சத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு கேரள அரசு ஷவர்மா விற்பனைக்கு கட்டுப்பாடுகளை விதித்ததைப் போல் தமிழக அரசும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.