கோவையில் உள்ள ஓட்டல்களில் உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பாரபட்சத்துடன் ஆய்வு மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்த கோட்டை மேடு பகுதியில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு செய்யாதது ஏன் ? என்று அதிகாரி அளித்த விளக்கம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உத்தரவிட்ட நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் அதிரடியாக ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது. கோவை, தூத்துக்குடி , கன்னியாகுமரி மாவட்டங்களில் மாவட்ட உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஒப்புக்கு ஆய்வு செய்ததாக புகார் எழுந்துள்ளது. கோவை கோட்டை மேட்டில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு செய்யாமல் சென்றது ஏன் ? என்று கேட்ட போது, அது குண்டு வெடிப்பு நடந்த இடம் என்று சோதனை நடத்தினால் பிரச்சனை வரும் என்று தெரிவித்தார் அதிகாரி காமராஜ்.
கோட்டைமேடு தவிர்த்து கோவையில் ஆய்வு நடந்த இடங்களில் 54 கடைகளில் 102 கிலோ பழைய இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கோவை மாவட்ட சுகாதார நியமன அலுவலர் தமிழ்செல்வன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததால் எங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது ? என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? என்று சொல்வதையும் அது தொடர்பான வீடியோவை வெளியிடுவதையும் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தவிர்த்தார்.
கன்னியாகுமரி மற்றும் விருதுநகரிலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எந்த ஓட்டலில் ஆய்வு செய்தோம் என்ற விவரங்களை வெளியிட மறுத்து விட்டனர். திருப்பூரில் முதல் நாள் ஆய்வுக்கு சென்ற மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதா ஓட்டலில் உள்ள சவர்மா உருளையை மட்டும் உற்று பார்த்து விட்டு அருகில் கலர் போடப்பட்ட கிரில் சிக்கனை கண்டுகொள்ளாமல் சென்ற நிலையில் , 2 வது நாளில் கலர் சேர்க்கப்பட்ட கிரில் சிக்கன், பழைய புரோட்டாக்களை கிலோ கணக்கில் பறிமுதல் செய்தார்.
சேலம் மற்றும் மேட்டூர் பகுதியில் 2 வது நாளாக 54 ஓட்டல்களில் ஆய்வு நடத்திய அதிகாரிகள் 200 கிலோ சிக்கன், 21 கிலோ ஐஸ் சோறு, நிறமூட்டப்பட்ட பிரியாணி , 5 கிலோ மயோனஸ், 8 கிலோ மசாலா ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர்.
அழுகிய சிக்கன் சிக்கிய புளுமூன் ரெஸ்டாரண்ட், காஸ்கேட் ஓட்டல் ஆகியவற்றை இழுத்து பூட்ட உத்தரவிடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கிழக்கு கடற்கரை சாலை ஆரோவில், கோட்டகுப்பத்தில் 6 கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள் அதிக நிறம் சேர்க்கப்பட்ட சிக்கன், கெட்டுப்போன சிக்கன், ஊசிபோன ஊறுகாய் போன்றவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.
கரூர் மாநகராட்சி பகுதிகளில் 2 வது நாள் நடத்தப்பட்ட சோதனையில் 20 கிலோ அழுகிய சிக்கன் சிக்கியது.
அதிகாரிகள் மக்களின் உடல் நலன் கருதி உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.