மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயைக் கொடுத்து வாக்குகளைப் பெறலாம் என்ற தி.மு.க.வின் பகல் கனவு பலிக்காது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்குவோம் என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்து 28 மாதங்களாக தாய்மார்களை ஏங்க வைத்து, இப்போது பாதிக்கும் குறைவானோருக்கு வழங்கி இருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளார். யாராலும் ஏற்க முடியாத 1008 நிபந்தனைகளை விதித்து, தமிழகத்தில் பாதி தாய்மார்களுக்கு மேல் பட்டை நாமம் போட்டிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க. அரசு பதவியேற்ற 28 மாதத்தில் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலையேறி இருப்பதாகவும், கடந்த 2 மாதங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 20 ரூபாய் வரை உயர்வு, காய்கறி விலை உயர்வால் மாதச் செலவுகள் 10 ஆயிரம் ரூபாய் வரை கூடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பல சிரமங்களை அனுபவிக்கும் தாய்மார்களில் பாதிக்கும் குறைவானோருக்கு உரிமைத் தொகையை வழங்குவது திட்டமிட்ட ஏமாற்று வேலை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.