நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரை நடிகை, நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு வந்து வாபஸ் பெற்றுக்கொண்டார். சீமானுக்கு தமிழ்நாட்டில் முழு பவர் இருப்பதால் அவர் முன்பு யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும், தனது தோல்வியை ஒத்துக் கொள்வதாகவும் நடிகை தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை அளித்த புகாரின் பேரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் நடிகையிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமானு சீமானுக்கும் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், நள்ளிரவில் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு தனது வழக்கறிஞர்களுடன் வந்த நடிகை, சீமான் மீது அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக கூறி எழுத்துப்பூர்வமான கடிதத்தை அளித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை, யாருடைய வற்புறுத்தலினாலும் வாபஸ் பெறவில்லை, சீமானிடம் பேசிவிட்டு, வழக்கை வாபஸ் பெற்றதாக குறிப்பிட்டார்.
சீமான் சூப்பர் என்றும் அவருக்கு தமிழ்நாட்டில் முழு பவர் உள்ளதால் அவர் முன்பு யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறினார். தமது தோல்வியை ஒத்துக் கொண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
தான் சீமானிடம் காசு வாங்கவில்லை என்றும் சீமானின் குரல் தான் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது, அது ஒலித்து கொண்டே இருக்கட்டும் என்றும் நடிகை தெரிவித்தார்.