பெரம்பலூரில் வேலைவாய்ப்பு முகாமுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வந்த இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் செல்லத் தயாரானதால், பாதுகாப்புக்கு வந்த சகோதரன் 2 மணி நேரமாக தடுத்து நிறுத்தி பாசப் போராட்டம் நடத்திய நிலையில் சொல்பேச்சு கேட்காமல், இளம்பெண் காதலனுடன் தப்பிச் சென்றதால் ஊர் திரும்ப பணமின்றி சகோதரன் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
தம்பியா...? காதலனா...? என்று தவித்து நிற்கும் பெண்ணிடம், தன்னுடன் வராவிட்டால் அவ்வளவுதான் என்று மிரட்டி அழைக்கும் இவர் தான் அந்தப்பெண்ணின் தாடி காதலன் விக்னேஷ்..!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அடுத்த நல்லறிக்கை கிராமத்தைச் சேர்ந்த பி.ஏ.பட்டதாரிப் பெண் ஒருவர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமுக்கு செல்வதாக கூறியுள்ளார். அந்தப்பெண்ணிற்கு பாதுகாப்பாக சித்தப்பா மகனான 17 வயது சிறுவனுடன் பெற்றோர் பெரம்பலூர் அனுப்பி வைத்தனர். வேலை வாய்ப்பு முகாம் சென்று திரும்பிய கையோடு அவரை அழைத்துச்செல்ல காதலன் விக்னேஷ் காத்திருந்தான். அவனுடன் செல்ல விடாமல் அந்த சிறுவன் தனது சகோதரியை தடுத்து நிறுத்தினான். காதலன் சற்று வலுவான ஆளாக இருந்ததால் சிறுவனை தள்ளிவிட்டு அந்த பெண்ணை அழைத்துச் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
அங்கிருந்தவர்கள் 3 பேரையும் அழைத்து விசாரித்தனர். கண்ணீருடன் தவித்த சிறுவன், அக்கா, அவன் குடிகாரன் வேண்டாம் என்று கெஞ்ச... இருதலைக்கொள்ளியாய் அந்தப்பெண் தவித்தார், ஆனால் காதலனோ அந்தப் பெண்ணை அங்கிருந்து அழைத்துச் செல்வதில் குறியாக இருந்தார்.
இவர்களது சண்டையை கண்டு பேருந்து நிலையம் அருகே நின்றிருந்தவர்கள் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தபோது காதலனுக்கு எதிராக கவுசிக் போல குடிகாரர் ஒருவர் புகுந்தார்.
நீ எப்படி இந்த பெண்ணை அழைத்து செல்கிறாய் பார்க்கிரேன் ? என்று அவர் தள்ளாடிக் கொண்டே சவால் விட ...அவரை சமாதானம் செய்வதற்குள் அவரது மனைவிக்கு போதும்.. போதும்.. என்றாகிவிட்டது
இருவரும் ஒரே சாதி என்றும் 5 வருடமாக காதலிப்பதாகவும் காதலன் விக்னேஷ் கூறிய நிலையில், இவரது கேரக்டர் சரியில்லை என்று வீட்டில் பெண் கொடுக்க மறுத்து விட்டனர், என்னை நம்பி அக்காவை அனுப்பி உள்ளனர்.. இப்ப வந்து கூப்பிட்டு போனா வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன பதில் சொல்வேன் ? என்று சிறுவன் விசும்பியபடி நின்றான்
அதற்குள்ளாக செல்போனை காண்பித்து அந்த பெண்ணிடம் காதலன் ஏதோ சொல்ல, அடுத்த நிமிடம் 'ஹட்ச்' விளம்பரத்தில் வரும் நாய்க்குட்டி போல காதலனுடன் சென்றார் அந்த பெண்.
சில நிமிடங்களுக்கெல்லாம் இருவரும் தலைமறைவான நிலையில், தனது சகோதரியை தேடி சிறுவன் பேருந்து நிலையத்தில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான்.
ஒரு கட்டத்தில் ஊர் திரும்ப பணமின்றி தவித்த அவனது கையில் பணம் கொடுத்து உதவிய நமது செய்தியாளர் சிறுவனை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தார். தகவல் அறிந்து அவரது பெற்றோர் தங்கள் மகளை கடத்திச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு காதல் வந்து விட்டால் குறுக்கே நிற்பது கோட்டைச் சுவராக இருந்தாலும், குட்டிச்சுவர்தான்...! என்பதற்கு இந்த எஸ்கேப் சம்பவமே சான்று..!