பார்சல் வாங்கிய சிக்கன் பிரியாணியில் வெந்த நிலையில் வெட்டுக்கிளி கிடந்ததாக வாடிக்கையாளர் புகார் தெரிவித்துள்ளார்.
பரமத்தி வேலூரில் அப்துல்காதர் என்பவர் நடத்தி வரும் வெல்கம் ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில், டேவிட் என்பவர் ஞாயிறு இரவில் பிரியாணி பார்சல் வாங்கியதாக கூறப்படுகிறது.
வீட்டிற்கு எடுத்துச் சென்று பார்த்த போது அதில் வெட்டுக்கிளி இருந்ததால், கடைக்கு திருப்பி எடுத்து வந்து காண்பித்த கேட்டபோது, நீங்களே வெட்டுக்கிளியை போட்டு கொண்டு வந்து இருக்கிறீர்கள் என்று உணவக உரிமையாளர் கூறியதாக தெரிகிறது.
மேலும், எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என அலட்சியமாக கூறியதைடுத்து இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல்அறிந்து வந்த போலீசார், விசாரணை நடத்தி பிரியாணி பார்சலை எடுத்துச் சென்று, உணவு பாதுகாப்புத்துறையிடம் புகார் அளிக்குமாறு கூறி டேவிட்டை அனுப்பி வைத்தனர்.
இதுபோன்ற உணவகங்களில், அடுப்பிற்கு மேலே எல்இடி பல்புகள் ஒளிர்வதால், அதிக வெளிச்சத்தை நோக்கி பறந்து வரும் விஷ பூச்சிகள், வெட்டுக்கிளிகள், பல்லிகள் என எது விழுந்தாலும் இவர்கள் அதை கவனத்தில் கொள்வதில்லை.
மேலும், சாலைகளின் ஓரத்திலேயே அடுப்புகள் அமைத்து சமைப்பதால் ரோட்டில் செல்லும் வாகனங்களில் இருந்து வரும் மாசு நிறைந்த தூசுகள், உணவுகளில் கலக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.