விலைவாசி உயர்வை கண்டித்தும், அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ரயில் மறியலால் 30 நிமிடங்கள் வரையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
மதுரையில் சு.வெங்கடேசன் எம்.பி தலைமையில் ஊர்வலமாகச் சென்ற கட்சியினர் பெரியார் பேருந்து நிலையம் அருகில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இந்தியன் வங்கியை முற்றுகையிட முயன்ற கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளு-முள்ளுவில் பெண்கள் உள்பட பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
புதுச்சேரியில் ஊர்வலமாகச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையிலும், தடையை மீறிச் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.