தஞ்சாவூரில், மொபெட் மீது லாரி மோதியதில் குழந்தைகளின் கண்முன் தாய் துடிதுடித்து உயிரிழந்தார்.
பெண் குழந்தையின் இரண்டு கால்கள் துண்டான நிலையில், படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சிறுவனும் உயிரிழந்தான்.
சுந்தரம் நகரைச் சேர்ந்த செரினா பேகம், தனியார் பள்ளியில் படித்து வரும் தனது 13 வயது மகள் மற்றும் 7 வயது மகனை பள்ளியில் விடுவதற்காக மொபட்டில் அழைத்துச் சென்றார்.
குறுக்கு சாலையில் இருந்து முக்கிய சாலையான ஈஸ்வரி நகர் சாலையில் நுழைந்தபோது, சாலையில் வேகமாக வந்த லாரி மோதி அதன் அடியில் மொபெட் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
சில மீட்டர் தூரம் வரையில் மொபெட் இழுத்துச் செல்லப்பட்டதில், செரினா பேகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த செரினா பேகத்தின் உறவினர்கள் அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டு, அடிக்கடி விபத்து நடைபெற்று வரும் ஈஸ்வரி நகரில் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுத்தனர்.
படுகாயத்துடன் மீட்கப்பட்ட 2 குழந்தைகளும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.