திருவாரூர் வடபாதிமங்கலம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்களின் நிலை குறித்து தமிழ்நாடு வேளாண்துறை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.
நிகழாண்டில் டெல்டா மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர். இதற்காக கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
போதிய நீர் இல்லாததால், தண்ணீர் திறக்கப்பட்ட 10 நாட்களிலேயே மேட்டூர் அணை மூடப்பட்டது. இதனால் குறுவை நெற்பயிர்கள் முளைத்த நிலையிலேயே காயத் தொடங்கின.
இந்நிலையில், காவிரி நீரை வழங்க கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருவதால், குறுவை நெற்பயிர்களுக்கு விவசாயிகள் நிவாரணம் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து வடபாதிமங்கலம் பகுதியில் குறுவை நெற்பயிர்களின் நிலை குறித்து ஆய்வு செய்த தமிழக வேளாண்துறை ஆணையர் சுப்பிரமணியன், அருகில் உள்ள நீர்நிலைகளிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து பாய்ச்சுவதற்கான சாத்தியங்கள், பயிர்கள் காய்ந்து போகாமல் இருக்க பயன்படுத்த வேண்டிய தெளிப்பான்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை செய்தார்.