சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பலியானார்கள்.
கொண்டலாம்பட்டியை சேர்ந்த ராஜதுரை - பிரியா ஆகியோருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தம்பதியினர் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த தாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நேற்றிரவு பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 8பேர் கொண்டலாம்பட்டி வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து மகளை தன்னுடன் அழைத்துச் செல்வதாக கூறி இன்று அதிகாலை ஆம்னி வேனில் எட்டு பேரும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை நோக்கி புறப்பட்டுச் சென்றனர். சங்ககிரி அருகே சின்னாக்கவுண்டனூர் பகுதியில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது இவர்கள் சென்ற ஆம்னி வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.