தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் சேஷசாயி காகித ஆலை குடியிருப்பில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
சென்னையை அடுத்த மாங்காட்டில் உள்ள காமாட்சியம்மன் கோயிலின் உபகோயிலான வெள்ளீஸ்வரர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாக சாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பிறகு கோபுரக் கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது.
காரைக்குடியில் உள்ள ஸ்ரீ கொப்புடையநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர், வேத மந்திரங்கள் முழங்க கோபுரக் கலசங்கள் மீது ஊற்றப்பட்டது.
சிதம்பரத்தில் உள்ள தில்லை காளி அம்மன் கோயிலில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கி, தினந்தோறும் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.