கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் 4.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கணினி பெண் ஆபரேட்டர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
எறையூர் பகுதியைச் சேர்ந்த இரு பெண்கள், கணவரின் இயற்கைக்கு மாறான மரணத்துக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தில் நிவாரணம் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுத்தனர்.
ஆனால், அதன் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடி தெரியவந்தது.
இந்த மோசடியில் முக்கிய நபராகச் செயல்பட்ட கணினி பெண் ஆபரேட்டர் அகிலா, மோசடிப் பணத்தை தனது உறவினர்களின் வங்கிக் கணக்குக்கு மாற்றி மோசடி செய்தது தெரியவந்தது.
மோசடிப் பணத்தில் கார், நகை, நிலம் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். கைதானவர்களிடம் இருந்து கார் உள்ளிட்ட வாகனங்கள், நகை, பணம், சொத்துப்பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த மோசடியில் வேறு அரசு உயர் அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.