திருவாரூரில் போலி இறப்புச்சான்றிதழ் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து 20 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிரவுண்ட் நிலத்தை கிரையம் செய்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய சேர்மன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
கர்த்தநாதபுரத்தை சேர்ந்த ஞானாம்பாள் என்பவரின் இரு மகன்களில் ராஜா என்பவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.
மற்றொரு மகனான செல்வம் என்பவர், ஞானாம்பாள் பெயரில் இருந்த நிலத்தை விற்பதற்கான பவரை, சேரன்குளம் ஊராட்சிமன்றத் தலைவியான அமுதாவின் கணவரும், தற்போது மன்னார்குடி பஞ்சாயத்து யூனியன் சேர்மனுமான மனோகரனுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை பயன்படுத்தி அவர்கள் மோசடி செய்து நிலத்தை அபகரித்த நிலையில், இதுகுறித்து, 2017ம் ஆண்டு மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என ராஜாவின் மனைவி ரோஸ்லின் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி மூன்று மாதத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டதையடுத்து விசாரணை தொடங்கியுள்ளது.