கள்ளக்குறிச்சியில் ஆதி திராவிட நலத்துறை தனி வட்டாட்சியரை பணியிடை நீக்கம் செய்த மாவட்ட ஆட்சியரை கண்டித்து தமிழகம் முழுவதும் வருவாய் துறையினர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனி வட்டாட்சியரான மனோஜ் முனியன், ஆதிதிராவிட நலத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை நீதிமன்ற உத்தரவுப்படி இடிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அந்த கட்டடம் திமுக-வை சேர்ந்தவர்களுக்கு சொந்தம் எனக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மனோஜ் முனியனை பணி நீக்கம் செய்ய ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் சரண்குமார் ஜடாவத்தை வலியுறுத்தியாகவும், இதையடுத்து மனோஜ் முனியன் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை கண்டித்து வட்ட அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வருவாய் துறையினர் இன்று பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் மாவட்டம் முழுவதும் வருவாய் துறையினர் 500 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர், தனி வட்டாட்சியர் மனோஜ் முனியன் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தினர்.