கடந்த 2 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யாமல் விவசாயிகளுக்கு தி.மு.க. அரசு துரோகம் இழைத்துள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறுவை சாகுபடியில் சேமிப்பு மற்றும் உடலுழைப்பை இழந்ததுடன், கூட்டுறவு சங்க கடன்காரர்களாகவும் மாறியுள்ள டெல்டா விவசாயிகள், தி.மு.க. அரசின் மீது மிகுந்த கோபத்துடன் உள்ளதாக கூறியுள்ளார்.
குறுவை சாகுபடிக்கே தண்ணீர் போதாத நிலையில், சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என இதுவரை அரசு வாயையே திறக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தான் முதலமைச்சராக 2017-ஆம் ஆண்டு பொறுப்பேற்றபோது கடும் வறட்சி இருந்ததாகவும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருதி குறுவை மற்றும் சம்பா சாகுபடி தொகுப்பை அறிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு அரசு காப்பீடு செய்யாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் நிவாரணம் பெற இயலாது என குறிப்பிட்டுள்ள அவர், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணத்தை உடனடியாக அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமது அரசு வறட்சிக் காலத்தில் செய்ததுபோல், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சம்பா மற்றும் தாளடி தொகுப்புத்திட்டத்தை அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க. அரசு தொடர்ந்து மெத்தனப் போக்கோடு செயல்பட்டால், விவசாயிகளை காக்க மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.