கிருஷ்ணகிரியில் உணவுப்பொருள் தடுப்புப் பிரிவு தாசில்தாரிடம் ஓட்டுநராகப் பணியாற்றிய நபர், ஜீப்பில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, அரிசிக் கடத்தல்காரர்களை உஷார்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு பறக்கும்படை தாசில்தார் இளங்கோவின் ஜீப் டிரைவராக சுப்பிரமணி என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
அரிசிக்கடத்தல் குறித்து கிடைக்கும் ரகசிய தகவலின் பேரில் இளங்கோ ஆய்வுக்குச் செல்லும் போதெல்லாம் கடத்தல்காரர்கள் தப்பித்து வந்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த இளங்கோ, தனது ஜீப்பை ஆய்வு செய்தபோது, அதில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில், குருபரப்பள்ளியைச் சேர்ந்த அரிசி கடத்தல்காரர் தேவராஜ் என்பவர் ஜி.பி.எஸ். கருவியை ஓட்டுநர் சுப்பிரமணியிடம் கொடுத்து ஜீப்பில் பொருத்தியதும், அந்த கருவி, தேவராஜின் மொபைலில் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், இந்த ஜிபிஎஸ் ஐடியாவுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் பாமகவைச் சேர்ந்த பொன்னப்பன் என்பவரை தேடி வருகின்றனர்.