கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இயற்கை முறையில் பிரசவம் பார்க்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில் அவருக்குப் பிறந்த ஆண் குழந்தை நலமுடன் உள்ளது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்பவருக்கும், போச்சம்பள்ளியைச் சேர்ந்த லோகநாயகி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இதில் லோகநாயகி சிறு வயதிலிருந்தே இயற்கை முறையில் விளையும் பொருட்களை மட்டுமே உண்டு வந்தார்.
திருமணத்தின் போதும் கூட இயற்கை முறையில் விளைவித்த நெல் மூலம் கிடைக்கப்பெற்ற அரிசியிலேயே உணவு சமைத்து வந்திருந்த திருமணத்திற்கு வந்த உறவினர்களுக்கு பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கருத்தரித்த லோகநாயகிக்கு பிரசவ நேரம் வந்ததையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதாக அனுமந்தபுரம் கிராம செவிலியரிடம் கூறிவிட்டு இயற்கை முறையில் பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் லோகநாயகிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து கணவர் மாதேஷ் பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆண்குழந்தை நலமுடன் பிறந்த நிலையில், நச்சுக்கொடி வராததால் லோகநாயகிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து புகாரின்பேரில் போச்சம்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.