வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறித்து விட்டு தப்பியோடியவர் 60 அடி பாழும் கிணற்றில் விழுந்து போலீஸில் மாட்டிக் கொண்டது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த குஞ்சுபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பிரதீப் வெள்ளி இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை சுமார் 3 மணியளவில் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு 2 பேர் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
சத்தம் கேட்டதால், தூக்கத்திலிருந்து எழுந்து வந்துள்ளார் பிரதீப்பின் மனைவி மகாலட்சுமி. அங்கு பதுங்கியிருந்த 2 பேர் அவரை கத்தி முனையில் அவரை மிரட்டி, கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சிக்குள்ளாகியிருந்த மகாலட்சுமி சுதாரித்துக் கொண்டு திருடன் திருடன் என கத்தியதும் வீட்டிலிருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் திருடர்களை நாலாபுறமும் தேடினர்.
மறுபுறம், குஞ்சுபாளையத்தில் இருந்து தப்பிய திருடர்கள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திலுள்ள காளிபாளையத்திற்கு சென்றனர். அங்கு பால் கறப்பதற்காக தனியாக வந்த பெண்ணையும் கத்தி முனையில் மிரட்டி உள்ளனர். அந்த பெண் உடனடியாக கத்தி கூச்சலிடவே, திருடர்கள் இருவரும் அங்கிருந்து ஓடத் துவங்கினர். மக்களிடம் பிடிபடக் கூடாது என்பதற்காக கண் மண் தெரியாமல் ஓடியவர்கள் விவசாய நிலத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.
அவர்களில், ஒருவன் பாம்பேறி எனப்படும் கிணற்றின் முதல் சுற்றுப் பகுதியில் விழுந்த நிலையில், மற்றொருவன் கிணற்றின் அடிப்பகுதியில் விழுந்துள்ளான். பாம்பேறியில் சிக்கியவன் அங்கிருந்த படிக்கட்டு வழியாக மேலே ஏறிய போது தன்னை நோக்கி மக்கள் வருவதை பார்த்ததும் நண்பனை அப்போவென விட்டுவிட்டு தப்பியோடினான். கிணற்றுக்குள் சில அடி மட்டுமே தண்ணீர் இருந்ததோடு, மேலே ஏறுவதற்கு வழியில்லாததால் உள்ளேயே சிக்கிக் கொண்டான் மற்றொருவன்.
துரத்தி வந்த மக்கள் அளித்த தகவலில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி உள்ளே இருந்தவரை மீட்டு பொள்ளாச்சி மேற்கு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்டவர் தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பதும், தப்பி ஓடியவர் அதேப்பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் என்பதும் தெரிய வந்தது.
காலில் அடிப்பட்டிருந்த ரமேஷை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் போலீஸார்.
ரயில் மூலமாக பொள்ளாச்சிக்கு வந்தவர்கள், அங்குள்ள டாஸ்மாக்கில் மது அருந்தி விட்டு திருட வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, தப்பிச் செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்த ஹரிதாஸையும் மடக்கி பிடித்து கைது செய்தனர் போலீஸார்.