தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையான பவானி சாகர், இன்று 69ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பவானிசாகருக்கு உண்டு.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்த அணையின் உயரம் 105 அடி. இந்த அணையின் மூலம் சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பவானி ஆறு-மாயாறு சேரும் இடத்தில் பத்தரை கோடி ரூபாய் செலவில் 1948 ஆம் ஆண்டு கட்டுமானப் பணி தொடங்கியது. இங்கிலாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு 7 ஆண்டுகளில் அணை கட்டி முடிக்கப்பட்டது.
பின்னர் 1955 ஆம் ஆண்டு பவானிசாகர் அணையை அப்போதைய முதலமைச்சர் காமராஜர் திறந்து வைத்தார். அணையில் உள்ள 21 மதகுகள் மூலம் வெளியேற்றப்படும் நீரின் மூலம் 16 மெகாவாட் மின்சாரமும் அங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
இதுவரை 22 முறை முழு கொள்ளளவை எட்டிய போதிலும், 68 ஆண்டுகளைக் கடந்து உறுதித்தன்மையுடன் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது பவானிசாகர் அணை...