அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க. தொண்டர்கள் மதுரை வரத் தொடங்கி உள்ளனர்.
வலையங்குளத்தில் அரண்மனை போன்று அமைக்கப்பட்ட நுழைவாயிலின் முகப்பிலேயே எம்.ஜி.ஆ.ர் மற்றும் ஜெயலலிதாவின் பிரம்மாண்டமான முகத்தோற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பிரம்மாண்டமான கட் அவுட்கள், டிஜிட்டல் பேனர்கள் போன்றவையும் ஆங்காங்கே வைக்கட்டுள்ளன.
மாநாட்டு மேடை 20 அடி நீளம், 100 அடி அகலத்தில் டிஜிட்டல் மேடையாக உருவாக்கப்பட்டு உள்ளது.
5 லட்சம் சதுர அடி பரப்பளவில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்காக பந்தல் அமைக்கப்பட்டு 1 லட்சத்துக்கும் அதிகமான நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.
காலையில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல இடங்களில் இருந்து மதுரைக்கு சென்று கொண்டுள்ளனர். அவர்களுக்கு இப்போதே உணவு வழங்கப்பட்டு வருகிறது.
முன்கூட்டியே வந்தவர்களுக்காக மதுரையில் பல்வேறு திருமண மண்டபங்களில் தங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
6,000 சமையல் கலைஞர்கள் இணைந்து சுமார் 10 லட்சம் தொண்டர்களுக்கு உணவு தயாரிக்க 35 ஏக்கரில் உணவுக் கூடங்களும் அமைக்கப்பட்டு உள்ளது.
மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த வெவ்வேறு இடங்களில் விரிவான வாகன நிறுத்துமிடங்களும் மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக சென்னையில் இருந்து தனியார் பவுன்சர்கள் உள்ளிட்ட பாதுகாவலர்களும் வரவழைத்து குவிக்கப்பட்டுள்ளனர்.
மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைக்க இருக்கும் 6 அடி அகலமும் 8 அடி நீளமும் கொண்ட அண்ணா உருவம் பொறுத்திய அ.தி.மு.க. கொடி காஞ்சிபுரத்தில் பிரத்யேகமாக நெய்யப்பட்டு மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.