ஆற்காட்டில் சமையல் மாஸ்டராக இருந்து வடசென்னையில் கொலைக்காக கத்தியை எடுத்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் , பட்டினப்பாக்கத்தில் பல பேர் முன்னிலையில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அஞ்சலையால் வீழ்ந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள மீனவன் உணவகத்தின் அருகில் வெள்ளை வேட்டி சட்டையுடன் நின்ற ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டி தலையை சிதைத்துப் போட்டு விட்டு தப்பிச்சென்றது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் என்பது தெரியவந்தது. ஆரம்பத்தில் நுங்கம்பாக்கம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் கிளர்க்காக இருந்த சுரேஷ் அரிசிக்கடத்தலில் ஈடுபட்டு பணியை இழந்து, ஆற்காட்டில் சமையல் மாஸ்டராக கையில் கரண்டியை பிடித்ததாக கூறப்படுகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டில் கூட்டாளிக்காக கத்தியை எடுத்ததால் ஆந்திராவில் முதல் கொலை வழக்கில் சிக்கி ஆற்காடு சுரேஷ் குற்றப்பட்டியலில் சேர்ந்தார்.
அடுத்தடுத்து காஞ்சிபுரம், சென்னையில் கொலை மற்றும் அடிதடி வழக்குகளில் சிக்கி சிறை சென்ற போது ஆற்காடு சுரேஷுக்கு, வட சென்னையின் குறிப்பிடதக்க ரவுடியாக வலம் வந்த சின்னா என்கிற சின்னகேசவலுவுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. சின்னா குழுவில் இருந்த போது சின்னாவின் காதலி அஞ்சலையை அடைய நடந்த போட்டியில் 2009 ஆம் ஆண்டு சின்னாவையும் அவரது வழக்கறிஞர் பகவத்சிங்கையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் வைத்து கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷ், காதலி அஞ்சலையுடன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு பின்னர் புளியந்தோப்பில் தங்கி இருந்த ஆற்காடு சுரேஷ் தன்னை வட சென்னையில் முக்கிய ரவுடியாக அடையாளப்படுத்திக் கொண்டார்.
2015 ஆம் ஆண்டு தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் கொலை செய்யப்பட்ட ஆதி தென்னரசுவின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலுவை, ரவுடி பாம் சரவணன் கோஷ்டி 2017ல் தூக்கியது. மறுபக்கம் 2018 ஆம் ஆண்டு சின்னகேசவலுவின் கூட்டாளியான ராதாவை வெட்டிசாய்த்த வழக்கில் ஆற்காடு சுரேஷ் கும்பல் போலீசில் சிக்கியது. 15 முறைக்கும் மேலாக குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாலும் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி சில மாதங்களில் குண்டர் சட்டத்தை உடைத்து வெளியே வந்து விடுவது ஆற்காடு சுரேஷின் வழக்கம் என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் பல்வேறு ரவுடிக் குழுக்களுடன் தீரா பகையை வைத்திருந்த ஆற்காடு சுரேஷ் முகம் சிதைத்து கொல்லப்பட்டிருப்பதாகவும், கொலைக்கு பின்னணியில் உள்ள ரவுடிக்குழு குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்