தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்ட்டெய்னர் லாரி ஒன்று, முன்னே சென்ற வாகனம் மீது மோதியதில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் சாலை நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளாயின.
தருமபுரியிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற அந்த கண்ட்டெய்னர் லாரியை ஓட்டுநர் அதிவேகமாக ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சாலை இறக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்ற சிறியரக சரக்கு வாகனம் மீது மோதவே, அந்த வாகனம் மோதி அடுத்தடுத்து 3 வாகனங்கள் சாலை நடுவே கவிழ்ந்தன.
விபத்தை ஏற்படுத்திய லாரியும் கவிழ்ந்து முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. இவ்விபத்தில் 5 பேர் லேசான காயமடைந்தனர்.
அடிக்கடி விபத்துகள் நிகழும் தொப்பூர் கணவாய் பகுதியில் 30 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என்று விதி உள்ள நிலையில், அதனை மீறி சிலர் வேகமாகச் செல்வதால் விபத்துகள் நேர்வதாகக் கூறப்படுகிறது.