சென்னையில் போலீஸ் போல நடித்து தனியார் நிறுவன அதிகாரியிடம் மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர்கள், சென்னையில் கடந்த ஆண்டு நடந்த பெட் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.
கடந்த 16ஆம் தேதி அண்ணாநகர் வழியாக கலெஷ்சன் பணத்துடன் பைக்கில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் பிரபாகர் ராவை வழிமறித்த அவர்கள், போலீஸ் போல நடித்து சோதனை செய்வதாகக் கூறி பணத்தை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து பிரபாகர் அளித்த புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ், பாலாஜி என்பவர்களை போலீசார் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் கடந்தாண்டு சென்னையில் பெட் வங்கியில் 32 கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சிக்கியவர்கள் என்பதும், ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது.
வங்கிக் கொள்ளைக்குப் பிறகு தங்களுக்கு யாரும் வேலை கொடுக்காததால் மீண்டும் கைவரிசை காட்டியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.