கோடிகளில் சம்பளம் இல்லை... சொகுசான பங்களா வாழக்கையில்லை... சினிமாவில இவருக்கென்று ரசிகர் மன்றமும் இல்லை... அரசியல் ஆசையும் இல்லை.. ஆனால் தான் உழைத்ததை அள்ளிக்கொடுக்க நல்ல மனசு இருக்கு. என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் காமெடி நடிகர் பாலாதான் மலைக்கிராமத்திற்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்த இளம் வள்ளல்..!
ஈரோடு மாவட்டம் கடம்பூர் அடுத்துள்ள குன்றி உட்பட 18 மலை கிராமத்தில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றன. இவர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக, கடம்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் வந்து செல்கின்றனர். குறிப்பாக பாம்புகடி , விலங்குகள் தாக்குதல் போன்ற சம்பவங்களில், பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாமல் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் தான் இரவு பகலாக தான் நடித்து சம்பாதித்த பணத்தை சேர்த்து வைத்து 5 லட்சம் ரூபாயை உணர்வுகள் டிரஸ்ட்டுக்கு வழங்கி இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் பாலா..! அதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர் , ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
தொலைக்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று வருவதாகவும், முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க, ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் தெரிவித்த பாலா, இப்படி சேவை செய்வது தனக்கு செம போதையாக இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக 10 ஆம்புலன்ஸ்களை வாங்கி வழங்க விரும்புவதாக நம்பிக்கை தெரிவித்தார்
பணமிருந்தால் மட்டும் போதாது பாலா போல நல்ல மனமிருந்தால் இன்னும் பலருக்கு புதிய நம்பிக்கை பிறக்கும்.