நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திற்கு 2000 முதல் 2013ம் ஆண்டு வரை வீடு, நிலம் வழங்கிய 1088 விவசாயிகளுக்கு 78 கோடி ரூபாய் கூடுதல் இழப்பீடு வழங்கும் பணி இன்று தொடங்கியது.
2000 முதல் 2005-ம் ஆண்டுவரை நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக 6 லட்சம் ரூபாயும், 2006 முதல் 2013-ம் ஆண்டுவரை நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக 10 லட்சம் ரூபாயும், 2000 முதல் 2013ம் ஆண்டு வரை வீடு மற்றும் நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக 14 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படுகிறது.
நெய்வேலியில் வட்டம் 18-ல் உள்ள அலுவலகத்தில் வரும் 26-ம் தேதி வரை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து காசோலையை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று 50க்கும் மேற்பட்டோர் நேரில் வருகை தந்து ஆவணங்களை சமர்ப்பித்து காசோலையை பெற்றுச் சென்றுள்ளனர். இதனிடையே, இந்த பட்டியலில் விடுபட்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்கப்படும் என என்.எல்.சி நிர்வாகம் கூறியுள்ளது.