நீட் தேர்வு என்ற ஒன்றை வைத்து பலரின் உயிரோடு தி.மு.க. அரசு விளையாடி வருவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்ததையும், துக்கம் தாளாமல் அவரது தந்தை தற்கொலை செய்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்டாலினும், அவரது மகனும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, மக்களின் காதுகளில் பூ சுற்றி ஆட்சியைப் பிடித்ததாகவும், அதில் ஒன்றுதான் நீட் ரத்து என்ற போலி வாக்குறுதி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம்; நீட்டை ரத்து செய்யும் சூட்சமம் ஸ்டாலினுக்கு தெரியும் என வெற்று முழக்கமிட்டு, மாணவர்களையும், மக்களையும் திசை திருப்பி தி.மு.க.வினர் வெற்றி பெற்றுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஒருமுறை கூட நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களவையை ஒத்திவைக்கும் அளவுக்கு மத்திய அரசுக்கு தி.மு.க. அழுத்தம் தரவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டாக்டர் படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை என கூறியுள்ள அவர், 40-க்கும் மேற்பட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்ளதால், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுவிட்டோம் என்ற மன உளைச்சலில் உயிரை போக்கும் முடிவை எடுக்க வேண்டாம் என மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.