மழை நீர் வடிகால் அமைத்து தரக்கோரி திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தை 11-வது வார்டைச் சேர்ந்த மக்கள் முற்றுகையிட்டனர்.
முற்றுகையை அடுத்து, பாதிப்புகளை பார்வையிட 11-வது வார்டுக்கு சென்ற நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷா, தம்மால் மழைநீரில் நடந்து செல்ல முடியாது எனக் கூறியதாக தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவருடன் வாக்குவாதம் செய்தனர்.
மக்கள் வலியுறுத்தியதை அடுத்து மழை நீரில் கால் நனையாமல் நகராட்சி ஆணையர் மழை சேதங்களை பார்வையிட்டார்.
அந்த நேரத்தில் அங்கு வந்த தி.மு.க.வைச் சேர்ந்த 11-வது வார்டு கவுன்சிலர் இளங்கோ, மழை வடிகால் வசதி செய்து தரப்படாதது குறித்து 20 ஆண்டுகளாக என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள் என்று பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. உடனே அவருடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
பருவமழை தொடங்குவதற்குள் மழை நீர் வடிகால் அமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்த பின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.