கன்னியாகுமரி மாவட்டம் தலக்குளம் வள்ளியாற்று நீரை திசை திருப்பும் தடுப்பில் ஏற்பட்டுள்ள நீர்கசிவை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகப் பெரிய குளமாகக் கருதப்படும் மணவாளக்குறிச்சி பெரியகுளம் மூலமாக ஆயிரத்து 200 ஏக்கரில் இரு போக சாகுபடி நடைபெற்று வருகிறது.
பேச்சிப்பாறை அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் இந்த குளத்திற்கான நீர் ஆதாரமாக உள்ளதால், அணையில் இருந்து தலக்குளம் வள்ளியாற்றுக்கு வரும் தண்ணீர், கருங்கற்களால் முகத்துவாரத்தில் தடுப்பு அமைத்து குளத்திற்கு திருப்பி விடப்படுகிறது.
தற்போது, தடுப்பிலிருந்து தண்ணீர் கசிந்து கொட்டி வருவதால் குளத்தில் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை பொய்த்து விட்டதால் குளத்தை மட்டுமே நம்பி இருக்கும் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக நாற்று நடவு செய்துள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.