உதகை வந்த ராகுல்காந்திக்கு பாரம்பரிய முறையில் தோடர் இன மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கேரளாவில் உள்ள தனது வயநாடு தொகுதியில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள ராகுல், விமானம் மூலம் கோவைக்கு வந்தார்.
அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சென்ற ராகுல் காந்தி, அங்கு முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்து உரையாடினார்.
சாலையோரம் படுகர் இன மக்கள் தனக்காக காத்திருந்ததைக் கண்டு காரிலிருந்து கீழே இறங்கிய ராகுல் அவர்களுடன் உரையாடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
கோத்தகிரியில் இருந்து புறப்பட்டு உதகை முத்தநாடு மந்துப் பகுதிக்கு சென்ற ராகுல்காந்தியை தோடர் இன மக்கள் பாரம்பரிய இசையுடன் வரவேற்றனர்.
அங்குள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்த ராகுல்காந்தி பாரம்பரிய உடையான பூத்துகுல்லியை அணிந்து நடனமாடினார்.
இளைஞர்கள் இளவட்டக் கல்லை தூக்குவது மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கு கற்களை உரசி நெருப்பு உண்டாக்குவதை பார்வையிட்ட ராகுல்காந்தியும் கற்களை உரசி பார்த்தார்.
பின்னர், சாலை மார்க்கமாக கூடலூர் வழியாக வயநாட்டிற்கு புறப்பட்டார்.