பூந்தமல்லி அருகே போக்குவரத்து விதிகளை மீறி சாலையின் எதிர்திசையில் பைக்கில் சென்ற இளைஞர், தடுப்பில் மோதி மின்வாரிய பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் மின்வாரிய பணிகளுக்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பூந்தமல்லியில் தங்கி பணிபுரிந்து வரும் ராமகுணா மற்றும் மதிவாணன் ஆகிய இருவர், நேற்றிரவு இரவு பணிக்கு செல்வதற்காக, பைக்கில் பூந்தமல்லி சர்வீஸ் சாலையில் எதிர்திசையில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் மோதி இருவரும் பைக்குடன் பள்ளத்தில் விழுந்த நிலையில், பள்ளத்திலிருந்த கம்பிகள் குத்தியதில் ராமகுணா சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மதிவாணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.