மேட்டூர் அருகே, அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், 5ஆம் வகுப்பு மாணவிகளை, மசாஜ் செய்ய சொல்லி டார்ச்சர் செய்ததாக குற்றம்சாட்டி, ஊரே திரண்டு வந்து அரசு பள்ளியை முற்றுகையிட்டதோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூரை அடுத்த கருங்கல்லூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 144 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் ராஜா என்பவர், 5ஆம் வகுப்பு மாணவியரை, தனது அறைக்கு அழைத்து, கை, கால்களை பிடித்து, அமுக்கிவிடச் சொல்லி டார்ச்சர் செய்வதாக கூறி, தங்கள் பெற்றோரிடம் மாணவிகள் கதறி அழுதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைத்த பெற்றோர்களும், கிராம மக்களும் ஒன்று திரண்டு பள்ளியை முற்றுகையிட்டனர்.
அப்போது, பள்ளிக்கூட அறைக்குள் பதுங்கியிருந்த தலைமை ஆசிரியரை நோக்கி முன்னேறியவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தகவலறிந்து வந்த மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் தணிகாச்சலம், தாசில்தார் முத்துராஜா, வட்டார கல்வி அலுவலர் சின்னராசு உள்ளிட்டோர், பெற்றோர் மற்றும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்...
பேச்சுவார்த்தையில் சமாதானம் அடையாத பெற்றோர் மற்றும் பொதுமக்கள், மேட்டூர்-மைசூர் சாலையில், மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மேட்டூர்-மைசூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு உள்ளும், புறமும், பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.