ஆஸ்கர் விருது வென்ற தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் மூலம் அதன் இயக்குநர் கார்த்திகி 5 கோடி ரூபாய் வரை சம்பாதித்துவிட்டார் என்றும் ஆனால் தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் அப்படத்தில் நடித்த பொம்மன் - பெள்ளி தம்பதி குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளின் தொடக்கவிழாவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்த பொம்மன் பெள்ளி தம்பதியை சந்தித்தபோது, எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப் படத்தின் இயக்குனர் கார்த்திகி போன்சால்வ்ஸ் மீது புகார்களை கொட்டித் தீர்த்தனர். புதிய வீடு கட்டித் தருவதாகவும், குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதாகவும் கூறித்தான் இயக்குநர் கார்த்திகி போன்சால்வ்ஸ் தங்களை அணுகியதாகக் கூறும் பெள்ளி, ஆனால் இதுவரை அப்படி எதுவும் செய்து தரவில்லை என்றும் முதலமைச்சர் கொடுத்த ஒரு லட்ச ரூபாய் மட்டுமே தங்களுக்கு கொடுக்கப்பட்டதாகவும் கூறினார்.
தங்கள் வாழ்க்கையை படமாக்கி நான்கைந்து கோடி ரூபாய் வரை படக்குழுவினர் சம்பாதித்துவிட்டனர் என்றும் ஆனால் இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு நடித்துக் கொடுத்த தங்களுக்கு ஊதியமாக எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் பொம்மன் கூறினார்.
தங்களுக்கு வீடு, கார் வாங்கிக் கொடுத்து, வங்கியில் பணமும் போட்டிருப்பதாக படக்குழுவினர் கூறுகின்றனர் என்றும் ஆனால் அப்படி எதுவும் கொடுக்கவில்லை என்றும் தங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டதில் இருந்து இயக்குநர் கார்த்திகி சரியாக பேசுவதில்லை என்றும் போனை எடுப்பதிலை என்றும் பொம்மன் - பெள்ளி தம்பதி கூறுகின்றனர்.
முதலமைச்சர் கொடுத்த ஒரு லட்ச ரூபாய் கூட மகனுக்கு கால் ஒடிந்ததால் மருத்துவ செலவுக்கு சென்றுவிட்டது என்று கூறும் பொம்மன், படக்குழு தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திடம் 2 கோடி ரூபாய் கேட்டு பொம்மன் பெள்ளி தம்பதி சட்ட நிபுணர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.