தூத்துக்குடியில், தங்களது காருக்கு வழிவிடாமல் சென்றதாக கூறி இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரிகளை நடுரோட்டில் வைத்து தாக்கி, சாவியை பறித்துச் சென்ற தம்பதியினர் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
தாளமுத்துநகரைச் சேர்ந்த சகோதரிகளான சந்தான செல்வி மற்றும் வினோஜா ஆகியோர், நேற்று பிற்பகல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்களது தாயை பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர்.
ராஜாஜி பூங்கா அருகே போக்குவரத்து நெரிசல் காரணமாக பின்னால் ஹாரன் அடித்துக் கொண்டே வந்த காருக்கு அவர்களால் வழிவிட முடியவில்லை என கூறப்படுகிறது.
இதனால், காரில் வந்த தம்பதியர் மற்றும் ஒருவர், பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி சகோதரிகளை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதோடு, வீடியோ எடுத்த செல்போனை உடைத்துவிட்டு சாவியை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த சகோதரிகள் இருவரும், தங்களை தாக்கிய தம்பதி உட்பட மூவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகாரளித்துள்ளனர்.