ஆண்டிப்பட்டி அருகே ஒப்பந்த பணிக்கான திட்டமதிப்பீட்டு சுவர் உடைந்து சாய்ந்ததால் பள்ளி மாணவி ஒருவர் இரு கால்களும் முறிந்து நடக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், கால்பந்து வீராங்கனையான தனது மகளுக்கு எந்த ஒரு நிவாரணமும் தராமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும் தாய் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கோல் போஸ்டை நோக்கி வேகமாக ஓடிய கால்கள் இரண்டும் ஒற்றை சுவரால் மொத்தமாக நசுக்கப்பட்டு, முறிந்து போனதால், கலங்கிய கண்களுடன் நடக்க இயலாமல் தவிக்கும் மாணவி ரூபிகா இவர் தான்..!
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துசங்கிலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அய்யனார்- கற்பகவள்ளி தம்பதியினரின் மூத்த மகளான ரூபிகா, ஆசாரிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். கால்பந்தாட்ட வீராங்கனையான ரூபிகா மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு சாதனை புரிந்துள்ளார்.
சம்பவத்தன்று முத்துசங்கிலிபட்டி கிராமத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டு விவரங்கள் எழுதப்பட்ட விளம்பர சுவர் அருகே நின்று ரூபிகா விளையாடி உள்ளார். அப்போது தரமற்றை முறையில் உறுதியான பிடிமானம் ஏதுமின்றி கட்டப்பட்ட அந்த குட்டிச்சுவர் சாய்ந்தது .இதில் ரூபிகாவின் இரு கால்களும் நசுங்கி எலும்பு முறிவு ஏற்பட்டது.
பலத்த காயங்களுடன் கதறித்துடித்த சிறுமியை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 20 தினங்களாக மருத்துவமனையில் நடக்க இயலாமல் சிகிச்சையில் உள்ள சிறுமி ரூபிகாவுக்கு எந்த ஒரு அரசு அதிகாரிகளும் உதவி செய்யாததால், தங்கள் மகளை வாடகை கார் ஒன்றில் ஏற்றி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்
சிறுமி ரூபிகாவை வந்து பார்ப்பதற்காக மாவட்ட ஆட்சி தலைவரை பெற்றோரும், அவர்களை அழைத்து வந்த இந்து இளைஞர் அணியினரும் வேண்டுகோள் விடுத்த நிலையில் , ஒருவர் கூட வந்து அந்த சிறுமியை பார்க்கவில்லை என்று கூறப்படுகின்றது
இதற்கிடையே சில அதிகாரிகள் தங்களை அழைத்து நாம் பேசிக் கொள்ளலாம் எனக்கூறியதாக பெற்றோர் தெரிவித்தனர்
இந்த சுவரின் அடித்தளம் உறுதியாக அமைக்காமல் வெறும் செங்கல் சிமெண்டு மூலம் கட்டப்பட்டதால் இந்த விபரீதம் நிகழ்ந்ததாகவும், மாவட்ட நிர்வாகம் ஒப்பந்ததாரர் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்ட கேட்டபோது முறையாக பதிலளிக்காமல் அரசு வேலை அப்படித்தான் இருக்கும் என்று தெரிவித்தனர். தரமற்ற குட்டிச்சுவரை கட்டிய புகாருக்குள்ளான ஒப்பந்ததாரர் கந்தலிங்கம், விளக்கம் அளிக்க மறுத்து கைபேசியை துண்டித்து விட்டார்.
அரசு பணிக்காக வைக்கப்பட்ட விளம்பர சுவர் சாய்ந்து 10ம் வகுப்பு மாணவியின் கால்கள் முறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.