பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ராமேஸ்வரத்தில் தங்கும் விடுதிகளில் பதுங்கிச் செல்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
வடமாநில குற்றவாளிகளின் புகலிடமாக அங்குள்ள தங்கும் விடுதிகள் மாறி வருவது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...
மக்கள் திரளாகக் காட்சியளிக்கும் இந்த இடம் ராமேஸ்வரம்! நாள்தோறும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் நூற்றுக்கணக்கானோர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பிற மாநிலங்களில் கொடூர குற்றச் செயல்களை செய்துவிட்டு போலீசிடமிருந்து தப்ப நினைக்கும் பலர் இங்கு வந்துவிடுவதாகக் கூறுகின்றனர் போலீசார்...
பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூன்று கொலைகளைச் செய்த மண்டு சர்மா, கோவிந்த் குமார் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில், அவர்கள் ராமேஸ்வரத்தில் பதுங்கி இருப்பது செல்போன் சிக்னல் மூலம் தெரிய வந்தது. தனியார் விடுதியில் தங்கியிருந்த இருவரையும் உள்ளூர் போலீசார் உதவியுடன் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பீகாருக்கு அழைத்துச் சென்றனர்.
இதேபோல ஒடிசாவைச் சேர்ந்த பப்பு நாயக், சுமந்த், தாஸ் என்ற 3 வழிப்பறிக் கொள்ளையர்கள் தனியார் விடுதியில் இருப்பதை செல்போன் சிக்னல் மூலம் கண்டறிந்த அம்மாநில போலீசார் இங்கு வந்து மூவரையும் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் நூற்றுக்கணக்கான தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வரும் நிலையில், ஒரு சில விடுதிகள் வாடிக்கையாளர்களின் விவரங்களை சரியாக சேகரிக்காமல் தங்க வைப்பதால் வட மாநிலக் குற்றவாளிகள் பதுங்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது.
சில தங்கும் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்றும், சந்தேகப்படும் வெளிமாநில நபர்கள் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்காமல் விடுவதாலும் சமீப காலமாக வடமாநில குற்றவாளிகளின் புகலிடமாக ராமேஸ்வரம் மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, வெளிமாநிலத்தவர்களை விடுதியில் அனுமதிக்கும்போது சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அவர்களின் அடையாள அட்டைகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்து சரிபார்த்துக் கொள்ள வேண்டுமென தனியார் தங்கும் விடுதிகளை அறிவுறுத்துகின்றனர் காவல்துறையினர்...